×

உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

ஜோன்பூர்: உத்தரப்பிரதேச பல்கலைக்கழகத்தில் விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயரை எழுதி வைத்த 4 மாணவர்களுக்கு 56 சதவீத மதிப்பெண் போட்ட 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் மாநில அரசு நடத்தும் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் பி.பார்ம் முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் சில மாணவர்களுக்கு தவறான விடைக்கு அதிக மதிப்பெண் தரப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் மாணவர் திவ்யன்சு சிங் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சம்மந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாளை பார்க்கவும், மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்யவும் மனு செய்திருந்தார்.

அதன்படி, விடைத்தாள்களைப் பார்த்த போது, அதில் 4 மாணவர்கள் விடைகளுக்கு நடுவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலரின் பெயரையும் எழுதியிருப்பது தெரியவந்தது. விடைகளை தப்பும் தவறுமாக எழுதியவர்களுக்கு 75க்கு 42 மதிப்பெண்கள் (56 சதவீதம்) தரப்பட்டிருந்தன. நியாயமாக அவர்களுக்கு பூஜ்ஜிய மதிப்பெண் தரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விடைத்தாளை திருத்திய 2 பேராசிரியர்கள் அவர்களுக்கு அதிக மதிப்பெண் தந்திருப்பதாக முன்னாள் மாணவர் திவ்யன்சு ஆளுநருக்கு புகார் அனுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் உத்தரவின் பேரில், பல்கலைக்கழக துணை வேந்தர் மேற்பார்வையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அசுதோஷ் குப்தா மற்றும் வினய் வர்மா ஆகிய 2 பேராசிரியர்கள் தவறு செய்தது உறுதிபடுத்தப்பட்டது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நிர்வாக கவுன்சிலுக்கு பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.

The post உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : UP University ,Jai Sriram ,Jhonpur ,Uttar Pradesh University ,Sriram ,State Government ,Veer Bahadur ,Jhonpur, Uttar Pradesh… ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள்...